IND vs SA,T20I: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிக ரன்களை குவித்த டாப் 5 இந்தியர்கள்!
சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த டாப் 5 இந்திய பேட்ஸ்மேன்களை பற்றிய வரலாற்றுச் சுவடுகளை பார்ப்போம்.

ஐபிஎல் 2022 தொடர் 2 மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில் அடுத்ததாக இந்தியா தனது சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. வரும் ஜூன் 9ஆம் தேதி துவங்கும் அந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற முக்கிய மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
எனவே அவருக்கு பதில் கேஎல் ராகுல் தலைமையில் சமீபத்திய ஐபிஎல் தொடரில் அசத்திய தினேஷ் கார்த்திக், அர்ஷிதீப் சிங், உம்ரான் மாலிக், குல்டீப் யாதவ், யுஸ்வென்ற சஹால் போன்ற வீரர்கள் இந்தியாவின் வெற்றிக்காக களமிறங்குகின்றனர்.
Trending
அதே போல் ஆல் ரவுண்டராகவும் கேப்டனாகவும் அசத்தி முதல் சீசனிலேயே கோப்பையை வென்று காட்டிய ஹர்திக் பாண்டியா மீண்டும் இந்திய அணியில் கம் பேக் கொடுத்துள்ளார். அதை தொடர்ந்து தலைநகர் டெல்லியில் துவங்கும் முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று இந்த தொடரை வெற்றியுடன் துவங்குவதற்காக இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் அங்கு தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சரி இந்த தருணத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த டாப் 5 இந்திய பேட்ஸ்மேன்களை பற்றிய வரலாற்றுச் சுவடுகளை பார்ப்போம்.
ரோஹித் சர்மா
இந்தியாவின் தற்போதைய கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா 2007 டி20 உலகக் கோப்பை முதல் தற்போது வரை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 13 போட்டிகளில் 362 ரன்களை 32.90 என்ற சராசரியில் 134.07 என்ற ஸ்டிரைக் ரேட்டில் குவித்துள்ளார்.
41 பவுண்டரிகள் 14 சிக்ஸர்கள் 2 அரை சதங்கள் 1 சதம் உட்பட தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் போன்ற நிறைய சாதனைகளை படைத்துள்ள அவர் அதிகபட்ச ஸ்கோராக கடந்த 2015இல் தரம்சாலாவில் நடைபெற்ற போட்டியில் 12 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 106 ரன்கள் குவித்துள்ளார். இருப்பினும் அப்போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது குறிப்பிடத்தக்கது.
சுரேஷ் ரெய்னா
காலம் கடந்தும் தனது பெயர் நிலைத்து நிற்கும் வகையில் கடந்த 2010இல் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு லீக் போட்டியில் 9 பவுண்டரி 5 சிக்சருடன் சதமடித்து 101 (60) ரன்கள் விளாசினார்.
அதனால் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றிலும் உலகக் கோப்பை வரலாற்றிலும் சதமடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்று சாதனை படைத்த அவர் அப்போட்டியில் இந்தியா 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து ஆட்ட நாயகன் விருதை வென்றார். மேலும் மொத்தமாக 11 இன்னிங்சில் 339 ரன்களை 33.90 என்ற சராசரியில் 148.03 என்ற ஸ்டிரைக் ரேட்டில் தெறிக்கவிட்ட இவர் இந்த பட்டியலில் 2-வது இடம் பிடிக்கிறார்.
விராட் கோலி
இந்தியாவின் முன்னாள் கேப்டன் மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 10 போட்டிகளில் 9 இன்னிங்சில் 254 ரன்களை 36.28 என்ற சராசரியில் 134.39 என்ற ஸ்டிரைக் ரேட்டில் எடுத்தார்.
அந்த அணிக்கு எதிராக 2 அரை சதங்கள் அடித்துள்ள இவர் அதிகபட்ச ஸ்கோராக கடந்த 2014 ஐசிசி டி20 உலகக் கோப்பை 2-வது அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா நிர்ணயித்த 153 ரன்கள் இலக்கைத் துரத்தும் போது 72* (44) ரன்கள் குவித்து வெற்றி பெற வைத்து ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
ஷிகர் தவான்
அதிரடியான இடது கை ஓபனிங் பேட்ஸ்மேனாக தனக்கென ஒரு முத்திரை பதித்த இவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 7 போட்டிகளில் 233 ரன்களை 33.28 என்ற சராசரியில் 141.21 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்து இந்த பட்டியலில் 4-வது இடம் பிடித்துள்ளார்.
அதிலும் அதிகபட்ச ஸ்கோராக 2018இல் ஜொகனஸ்பர்க் நகரில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் 10 பவுண்டரி 2 சிக்சருடன் 72 (39) ரன்கள் விளாசிய இவர் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற முக்கிய பங்காற்றினார்.
எம்எஸ் தோனி
டி20 போட்டிகள் தொடங்கப்பட்டது முதல் 2019 வரை தென்னாபிரிக்காவுக்கு எதிராக பெரும்பாலும் கேப்டனாக களமிறங்கிய 13 போட்டிகளில் 204 ரன்களை 137.83 என்ற ஸ்டிரைக் ரேட்டில் 34.00 என்ற சராசரியில் குவித்துள்ள இவர் அதிகபட்ச ஸ்கோராக 52 ரன்களை குவித்து இந்த பட்டியலில் 5-வது இடம் பிடிக்கிறார்.
Win Big, Make Your Cricket Tales Now