
இந்தியா - இலங்கை இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று கௌகாத்தியில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனாகா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவரும் இணைந்து அபாரமாக பேட்டிங் செய்து இருவருமே அரைசதம் அடித்து, முதல் விக்கெட்டுக்கு 19.4 ஓவரில் 143 ரன்களை குவித்து கொடுத்தனர். அதன்பின் கில் 70 ரன்களுக்கும், அவரைத்தொடர்ந்து ரோஹித் 83 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
அதன்பின்னர் ஷ்ரேயாஸ் ஐயர் 28, கேஎல் ராகுல் 39 ஆகியோர் சிறிய பங்களிப்பு செய்து ஆட்டமிழந்தனர். அவர்கள் ஆட்டமிழந்தாலும், 3ஆம் வரிசையில் இறங்கி நிலைத்து நின்று அபாரமாக விளையாடிய விராட் கோலி சதமடித்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் 45ஆவது சதத்தை விளாசி சாதனை படைத்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் 49 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் இருக்கும் நிலையில், கோலி 45ஆவது சதத்தை விளாசியுள்ளார். இன்னும் 5 சதங்கள் அடித்தால் சச்சின் சாதனையை முறியடித்துவிடுவார் என்பதால் இந்த ஆண்டே அந்த சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது.