
இந்தியா - இலங்கை அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி கௌகாத்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் ஷனக்கா பவுலிங் செய்ய முடிவு செய்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஜோடி கில் மற்றும் ரோகித் இருவரும் ஜோடி சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 143 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதில் சுப்மன் கில் 70 ரன்கள், ரோகித் சர்மா 83 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தனர்.
அடுத்து உள்ளே வந்த விராட் கோலி நிதானமாக விளையாடி 45வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார். இந்தியாவில் கிட்டத்தட்ட 1250 நாட்களுக்கு பிறகு அடிக்கும் சதம் இதுவாகும். இந்த இன்னிங்சில், 87 பந்துகளில் 113 ரன்களுக்கு அவுட்டானார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 373/7 ரன்களை அடித்தது.
மிகப்பெரிய இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு துவக்க வீரர் பதும் நிஷங்கா 72 ரன்களும், தனஞ்ஜெயா டி சில்வா 47 ரன்களும் அடித்து அவுட்டாகினர். 176/7 என இலங்கை அணி தடுமாறியபோது, உள்ளே வந்த கேப்டன் ஷனக்கா அபாரமாக ஆடி படுதோல்வியிலிருந்து மீட்டார். இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்த அவர் 88 பந்துகளில் 108 ரன்கள் அடித்தார். இருப்பினும் 50 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் சேர்த்தது இலங்கை அணி. இதன் மூலம் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.