IND vs SL, 2nd ODI: கேஎல் ராகுல் அரைசதம்; இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இந்தியா - இலங்கை இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது ஒருநாள் போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனாகா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்த போட்டியில் யுஸ்வேந்திர சாஹலுக்கு பதிலாக குல்தீப் யாதவ் ஆடுகிறார். கடந்த போட்டியின்போது சாஹலுக்கு காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார். இலங்கை அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டன. பதும் நிசாங்கா மற்றும் மதுஷங்காவிற்கு பதிலாக முறையே நுவனிந்து ஃபெர்னாண்டோ மற்றும் லஹிரு குமாரா ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டனர்.
Trending
அதன்படி முதலில் விளையாடிய இலங்கை அணியின் தொடக்க வீரர் அவிஷ்கா ஃபெர்னாண்டோவை 20 ரன்களுக்கு போல்டாக்கி அனுப்பினார் முகமது சிராஜ். அதன்பின்னர் நுவனிந்து ஃபெர்னாண்டோ மற்றும் குசால் மெண்டிஸ் இணைந்து சிறப்பாக பேட்டிங் செய்து 2ஆவது விக்கெட்டுக்கு 73 ரன்களை சேர்த்தனர். குசால் மெண்டிஸ் 34 ரன்களுக்கு குல்தீப் யாதவின் பவுலிங்கில் ஆட்டமிழக்க, அரைசதம் அடித்து நுவனிந்து ஃபெர்னாண்டோ 50 ரன்களுக்கு ரன் அவுட்டாகி வெளியேறினார்.
தனஞ்செயா டி சில்வாவை டக் அவுட்டாக்கி அனுப்பினார் அக்ஸர் படேல். இலங்கை மிடில் ஆர்டரின் பலமான சாரித் அசலங்கா(15) மற்றும் கேப்டன் தசுன் ஷனாகா (2) ஆகிய இருவரையும் குல்தீப் யாதவ் வீழ்த்தினார். 126 ரன்களுக்கே இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் வனிந்து ஹசரங்கா(21), வெல்லாலகே(32), சாமிகா கருணரத்னே(17), கசுன் ரஜிதா (17) ஆகிய நால்வரும் ஓரளவிற்கு பங்களிப்பு செய்ய, அந்த அணி 215 ரன்கள் அடித்தது.
ஹசரங்கா மற்றும் சாமிகா கருணரத்னே ஆகிய இருவரையும் உம்ரான் மாலிக் வீழ்த்த, வெல்லாலகேவை சிராஜ் வீழ்த்த 39.4 ஓவரில் 215 ரன்களுக்கு இலங்கை அணி ஆல் அவுட்டானது. இந்திய அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய குல்தீப் யாதவ் மற்றும் முகமது சிராஜ் ஆகிய இருவரும் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். உம்ரான் மாலிக் 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடக்கம் கொடுத்தனர். இதில் ரோஹித் சர்மா 17 ரன்களிலும், ஷுப்மன் கில் 21 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர் விராட் கோலி 4 ரன்களை மட்டுமே எடுத்து தனது விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் - கேஎல் ராகுல் இணை ஓரளவு பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். பின் 28 ரன்களில் ஸ்ரேயாஸ் ஐயர் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பட்சத்திலும் 36 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இருப்பினும் மறுமுனையில் தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேஎல் ராகுல் அரைசதம் கடந்தார். தொடர்ந்து இறுதிவரை களத்தில் இருந்த கேஎல் ராகுல் 103 பந்துகளில் 64 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன்மூலம் இந்திய அணி 43.2 ஓவர்களில் இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இதன்மூலம் இந்திய அணி ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
Win Big, Make Your Cricket Tales Now