IND vs WI, 3rd ODI: ஸ்ரேயாஸ், ரிஷப் அபாரம்; விண்டீஸுக்கு 266 ரன்கள் இலக்கு!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 265 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
இந்த போட்டிக்கான இந்திய அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கேஎல் ராகுல், தீபக் ஹூடா, ஷர்துல் தாகூர், யுஸ்வேந்திர சாஹல் ஆகிய நால்வரும் நீக்கப்பட்டு முறையே, ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் சாஹர், குல்தீப் யாதவ் ஆகிய நால்வரும் சேர்க்கப்பட்டனர்.
Trending
டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணி மளமளவென 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இந்திய அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ரோஹித் சர்மா, 13 ரன்களில் இன்னிங்ஸின் 4ஆவது ஓவரில் அல்ஸாரி ஜோசஃபின் பந்தில் ஆட்டமிழக்க, அதே ஓவரில் கோலி டக் அவுட்டானார். தவானும் இன்னிங்ஸின் 10ஆவது ஓவரில் 10 ரன்னுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி 42 ரன்களுக்கே இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.
அதன்பின்னர் ஸ்ரேயாஸ் ஐயருடன் 4ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரிஷப் பந்த் பொறுப்புடன் ஆடினார். ஸ்ரேயாஸ் நிலைத்து நின்று நிதானமாக விளையாட, ரிஷப் பந்த் அவரது இயல்பான ஆட்டத்தை ஆடி ஸ்கோரை உயர்த்தினார். கரோனா பாதிப்பால் முதல் 2 ஒருநாள் போட்டிகளில் ஆடிராத ஸ்ரேயாஸ் ஐயர், இந்த கம்பேக் போட்டியில் பொறுப்புடன் விளையாடி அரைசதம் அடித்தார். அவரைத்தொடர்ந்து ரிஷப் பந்தும் அரைசதம் அடித்தார்.
ஸ்ரேயாஸ் ஐயர் - ரிஷப் பண்ட் ஜோடி 4ஆவது விக்கெட்டுக்கு 110 ரன்களை குவித்தது. அரைசதம் அடித்த பண்ட் 56 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயரும் 80 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இறுதியில் வாஷிங்டன் சுந்தர் - தீபக் சஹார் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய தீபக் சஹார் 38 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதில் இறுதிவரை களத்தில் இருந்த வாஷிங்டன் சுந்தர் கடைசி ஓவரில் 33 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனால் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 265 ரன்களைச் சேர்த்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகளையும், அல்ஸாரி ஜோசப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
Win Big, Make Your Cricket Tales Now