Advertisement

IND vs WI: கேப்டன்சிக்கு திரும்பிய ரோஹித்; பிஸ்னோய், ஹூடாவிற்கு வாய்ப்பு!

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan January 27, 2022 • 10:57 AM
IND vs WI: Indian Squad For ODI & T20 Series Announced; Rohit Sharma Returns As Skipper
IND vs WI: Indian Squad For ODI & T20 Series Announced; Rohit Sharma Returns As Skipper (Image Source: Google)
Advertisement

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிய இந்திய அணி, டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆகிய இரண்டு தொடர்களையும் இழந்தது. டெஸ்ட் தொடரை 2-1 என இழந்த இந்திய அணி, ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆகி அதிர்ச்சியளித்தது.

அடுத்ததாக இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. வரும் பிப்ரவரி 6, 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள்  போட்டிகளும், பிப்வரி 16, 18, 20 ஆகிய தேதிகளில் 3 டி20 போட்டிகளும் நடக்கவுள்ளன.

Trending


தென் ஆப்பிரிக்காவிடம் மரண அடி வாங்கிய இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக அபாரமாக விளையாடி வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது. இந்திய அணியில் ஆல்ரவுண்டர்கள், மிடில் ஆர்டர் ஆகிய பிரச்னைகள் உள்ள நிலையில், 2023 உலக கோப்பைக்கு தயாராகும் விதமாக அணியை கட்டமைக்க வேண்டிய அவசியம் உள்ளது.

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. காயத்திலிருந்து மீண்டும் முழு ஃபிட்னெஸுடன் ரோஹித் சர்மா அணிக்கு திரும்பிவிட்டார். ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் துணை கேப்டன் கேஎல் ராகுல், ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இடம் பெற்றுள்ளனர்.

3ஆம் வரிசையில் விராட் கோலி. மிடில் ஆர்டர் வீரர்களாக சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம்பெற்றுள்ள நிலையில், தீபக் ஹூடாவிற்கு முதல் முறையாக இந்திய ஒருநாள் அணியில் இடம் கிடைத்துள்ளது. விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளார்.

ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் இன்னும் முழு ஃபிட்னெஸை அடையாததால் அவர்கள் அணியில் இடம்பெறவில்லை. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அசத்திய தீபக் சாஹர் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகிய இருவரும் அணியில் இடம்பெற்றுள்ளனர். 

சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் இடம்பெறவில்லை. 4 ஆண்டுகளுக்கு பிறகு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடிய அஷ்வின் எதிர்பார்த்த அளவிற்கு சோபிக்காத நிலையில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் அஸ்வின் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

கடைசியாக 2019ஆம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பையில் இணைந்து ஆடிய குல்தீப் - சாஹல் ரிஸ்ட் ஸ்பின் ஜோடி மீண்டும் ஒருசேர ஆடவுள்ளது. அந்த உலக கோப்பைக்கு பின், இருவரும் ஒன்றாக இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்தனர். சாஹல் மட்டும் இந்திய அணியில் ஆடிவந்த நிலையில், மீண்டும் குல்தீப்பிற்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது. மேலும் ஸ்பின்னர்களாக வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

பும்ரா மற்றும் ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர்களாக முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோருடன், ஐபிஎல்லில் அபாரமாக பந்துவீசி, 15ஆவது சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது பவுலராக திகழ்ந்த ஆவேஷ் கானுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.

இந்திய ஒருநாள் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷிகர் தவான், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, ரிஷப் பந்த், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான்.

இந்திய டி20 அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), இஷான் கிஷான்,விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ரிஷப் பந்த், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், யுஸ்வேந்திர சாஹல், அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான், ஹர்ஷல் படேல்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement