
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது ஜூலை 12ஆம் தேதி டோமினிக்கா நகரில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 150 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி சார்பாக அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
அதனை தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்ஸ்ஸை விளையாடி வரும் இந்திய அணியானது இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 312 ரன்கள் குவித்து 162 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்த போட்டியில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோகித் சர்மா தனது 10-ஆவது சதத்தை பூர்த்தி செய்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதே வேளையில் ஒருபுறம் நிலைத்து விளையாடி வரும் தொடக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது அறிமுக போட்டியிலேயே 215 பந்துகளை சந்தித்து மூலம் சதம் அடித்து அசத்தினார். அவர் அடித்த இந்த சதத்தின் மூலம் தற்போது ஏகப்பட்ட சாதனைகளை அவர் படைத்துள்ளார். அதிலும் குறிப்பாக அறிமுக போட்டியில் சதம் விளாசிய 17ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை யாஷஸ்வி ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார்.