INDW vs ENGW, Only Test: மீண்டும் கலக்கிய தீப்தி சர்மா; இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய மகளிர் அணி 347 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 1 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற டி20 தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 428 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் சுபா சதீஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், யாஸ்திகா பாட்டியா மற்றும் தீப்தி ஷர்மா ஆகிய 4 வீராங்கனைகள் அரைசதம் அடித்து அசத்தினர்.
Trending
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து வீராங்கனைகள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விரைவில் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் நாட் ஸ்கைவர்-ப்ரண்ட் தவிர மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். வெறும் 35.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் 59 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து 292 ரன்கள் முன்னிலை என்ற வலுவான நிலையில் தனது 2ஆவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் அடித்துள்ளது.
கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 44 ரன்களுடனும், பூஜா வஸ்த்ரகர் 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடரும் என எதிர்பார்த்த நிலையில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் இன்னிங்ஸைத் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 479 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸிலும் சொதப்பலான பேட்டிங்கையே வெளிப்படுத்தியது. அந்த அணியின் சோபியா டங்க்லி 15, டாமி பியூமண்ட் 17 ரன்களுக்கும், கேப்டன் ஹீதர் நைட் 21 ரன்களிலும், நாட் ஸ்கைவர் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதைத்தொடர்ந்து வந்த டேனியல் வையர், எமி ஜோன்ஸ், சார்லோட் டீன் ஆகியோரும் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டை இழந்தனர்.
இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து வீராங்கனைகளும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, அந்த அணி 131 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 4 விக்கெட்டுகளையும், பூஜா வஸ்திரேகர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய மகளிர் அணி 347 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய தீப்தி சர்மா ஆட்டநாயகியாக தேர்வுசெய்யப்பட்டார்.
Win Big, Make Your Cricket Tales Now