
இந்திய அணி வீரர்களுக்கான பிசிசிஐ மத்திய ஒப்பந்த பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மாதமே பிசிசிஐ வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியலை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில காரணங்களினால் அது தாமதமானது.
இந்நிலையில் தான் இன்றைய தினம் பிசிசிஐ வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி ஏ+, ஏ, பி மற்றும் சி என நான்கு பிரிவுகளின் அடிப்படையில் மொத்தமாக 34 வீரர்கள் பிசிசிஐ மத்திய ஒப்பந்தத்தை பெற்றுள்ளனர். அதிலும் குறிப்பாக கடந்தாண்டு ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் மீண்டும் பிசிசிஐ ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளனர்.
இதுதவிர்த்து வருண் சக்ரவர்த்தி, அபிஷேக் சர்மா, ஆகாஷ் தீப், ஹர்ஷித் ரானா உள்ளிட்டோருக்கும் ஒப்பந்தம் கிடைத்துள்ளது. இதில் ஏ+ கிரேடில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தொடர்கின்றனர். முன்னதாக ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா மூவரும் டி20 கிரிக்கெட்டில் இருந்து விலகிய நிலையிலும் அவர்களுக்கு ஏ+ ஒப்பந்தம் கிடைத்துள்ளது.