
டி20 முறையில் நடைபெற்ற ஆசியப் போட்டி கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் வங்கதேசத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா. இந்நிலையில் இன்று நடைபெற்றுவரும் இறுதிச் சுற்றில் இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததது.
அதன்படி களமிறங்கிய ஆஃப்கான் அணிக்கு முகமது ஷஸாத் - அக்பாரி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அக்பாரி 5 ரன்களுக்கும், ஷஸாத் 4 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். அதிலும் குறிப்பாக ஷஸாத் எதிர்கொண்ட பந்து அவரது தோல்பட்டை பகுதியில் பட்டு கீப்பரிடம் சென்றது. அதனை சரியாக பார்க்க தவறிய களநடுவர் அவுட் என தீர்ப்பு வழங்கினார்.
அதன்பின் களமிறங்கிய நூர் அலி ஸத்ரானும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அஃப்சர் ஸஸாய் 15, கரீம் ஜானத் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இருப்பினும் நான்காவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஷாஹிதுல்லா கமல் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.