
சர்வதேச அரங்கில் முதன்மை கிரிக்கெட் அணியாக கருதப்படும் இந்தியா சமீப காலங்களில் திறமை இருந்தும் பல்வேறு சொதப்பல்களால் தோல்விகளை சந்தித்து வருவது ரசிகர்களை வேதனையடைய வைத்துள்ளது. கடைசியாக கடந்த 2013ஆம் ஆண்டு தோனி தலைமையில் சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்தியா அதன் பின் ஒரு ஐசிசி உலக கோப்பையை வெல்ல முடியாமல் திண்டாடி வருகிறது.
அந்த நிலைமை 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற ரோஹித் சர்மா புதிய கேப்டனாக பொறுப்பேற்றதால் மாறும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு 2022 ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை தோல்விகள் மீண்டும் ஏமாற்றத்தையே பரிசளித்தது. இந்த தோல்விகளுக்கு சுமாரான அணி தேர்வு, கேப்டன்ஷிப், ஐபிஎல் தொடரில் அடித்து நொறுக்கும் நட்சத்திர வீரர்கள் இந்தியாவுக்காக தடவலாக பேட்டிங் செய்வது போன்ற நிறைய அம்சங்கள் காரணமாக அமைந்தாலும் முக்கிய வீரர்கள் காயத்தை சந்தித்து கடைசி வெளியேறிவது மற்றொரு காரணமாக அமைந்து வருகிறது.
குறிப்பாக முதன்மை வேகப்பந்து வீச்சாளராக கருதப்படும் ஜஸ்பிரித் பணிச்சுமை என்ற பெயரில் நிறைய தொடரில் ஓய்வெடுத்த நிலையில் டி20 உலக கோப்பைக்கு முன்பாக கடைசி நேரத்தில் காயமடைந்து வெளியேறினார். ஆனால் ஐபிஎல் தொடரில் எந்த போட்டியையும் தவற விடாமல் விளையாடும் அவர் அடுத்ததாக நடைபெறும் வங்கதேச டெஸ்ட் தொடரிலும் விளையாடவில்லை.