
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாரம்பரியமாக நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. இம்முறை பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் முதல்முறையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நேருக்கு நேர் மோதவுள்ளனர்.
அதிலும் குறிப்பாக இத்தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அங்கமாக நடைபெற இருப்பதால், இதில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. அதுமட்டுமின்றி இந்திய அணி கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய இரண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரையும் வென்று அசத்தியுள்ளதால், மூன்றாவது முறையாகவும் இத்தொடரை கைப்பற்றி சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து முன்னாள் வீரர்கள், இந்நாள் வீரர்கள் என தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றன. அந்தவகையில்,இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரை இந்தியா வெல்ல வேண்டுமானால், அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோருடன் சிறந்த ஃபார்மில் மீண்டு வரும் முகமது ஷமி ஆகியோர் தேவை என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ தெரிவித்துள்ளார்.