
வங்கதேசத்துக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாப தோல்வியை சந்தித்த இந்தியா 1 -0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது. டாக்கா மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா வங்கதேச பவுலர்களின் திறமையான பந்து வீச்சில் 41.2 ஓவரில் வெறும் 186 ரன்களுக்கு சுருண்டது. கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக ஷாகிப் அல் ஹசன் 5 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து 187 ரன்களை துரத்திய அந்த அணிக்கு லிட்டன் தாஸ் 41, சாகிப் 29, ரஹீம் 18 என முக்கிய கிரிக்கெட் வீரர்கள் பெரிய ரன்களை எடுக்காமல் சீரான இடைவெளிகளில் ஆட்டமிழந்து சென்றனர். அதனால் 139/6 என தோல்வியின் பிடியில் சிக்கிய அந்த அணியால் இந்தியாவின் வெற்றி உறுதியான போது விஸ்வரூபம் எடுத்த மெஹதி ஹசன் நங்கூரமாக நின்று வெற்றிக்குப் போராடினார். அப்போது வங்கதேசம் 155/9 ரன்களில் இருந்த போது வெறும் 15 ரன்களில் இருந்த அவர் கொடுத்த அழகான கேட்ச்சை விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் கோட்டை விட்டார்.
அதை பயன்படுத்திய ஹசன் 38 ரன்கள் விளாசி முஸ்தபிசுர் ரஹ்மானுடன் இணைந்து 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வங்கதேசத்துக்கு மறக்க முடியாத வெற்றியை பெற்றுக் கொடுத்தார். முன்னதாக இப்போட்டியில் ராகுல் கேட்ச்சை விட்டது தான் தோல்விக்கு காரணமென்று நிறைய ரசிகர்கள் அவரை சரமாரியாக விமர்சித்து வருகிறார்கள்.