
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் 22ஆம் தேதியும், ஒருநள் தொடரானது பிப்ரவரி 6ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. இதனையடுத்து டி20 தொடருக்கான இரு அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி ஜனவரி 22 அன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
இதில், கடந்த 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு காயம் காரணமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்த இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, இந்தப் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டுக்கு மீண்டும் வர முடியும். இந்த முதல் டி20 போட்டியில், அபிஷேக் சர்மாவும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனும் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள்.