இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு லாரா வோல்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியது. இதனையடுத்து இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி அட்டத்தில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியை எதிர்த்து, அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரெலிய அணி பலப்பரீட்சை நடத்தின.
இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டில் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நிலையில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் அலிசா ஹீலி 5 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த போப் லிட்ச்ஃபீல்ட் - எல்லிஸ் பெர்ரி இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் அரைசதங்களைக் கடந்ததுடன், 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
இதில் எல்லிஸ் பெர்ரி 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 77 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த பெத் மூனி 24 ரன்களுக்கும், அனபெல் சதர்லேண்ட் 3 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையில் மறுபக்கம் அபாரமாக விளையாடிய போப் லிட்ச்ஃபீல்ட் தனது சதத்தைப் பூர்த்தி செய்தார். பின்னர் 17 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 119 ரன்களைச் சேர்த்த கையோடு லிட்ச்ஃபீல்ட் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளில் தஹ்லியா மெக்ராத் 63 ரன்களைச் சேர்த்த நிலையில், மற்ற வீராங்கனைகள் சோபிக்க தவறினர்.