
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் மூலம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது நடத்தப்பட்டு வருகிறது. அதிலும் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை நடைபெறும் சமயங்களில் ஆசிய கோப்பை தொடரும் ஒருநாள் ஃபார்மேட்டிலும், டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறும் சமயங்களில் டி20 ஃபார்மேட்டிலும் இத்தொடரானது நடத்தப்பட்டு வருகிறது.
அந்தவரிசையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் வடிவிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தியது. ஆனால் இதில் இந்திய அணி பாகிஸ்தான் செல்லாத காரணத்தால் இத்தொடரானது ஹைப்ரீட் மாடலில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் இலங்கையில் நடத்தப்பட்டன. இத்தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி இலங்கையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்நிலையில் இத்தொடரின் அடுத்த சீசனுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அதன்படி 2025ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இந்தியாவில் நடத்தப்படும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்மூலம் கிட்டத்திட்ட 35 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய கோப்பை தொடரானது இந்தியாவில் நடைபெறவுள்ளது. முன்னதாக கடந்த 1990-91ஆம் ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இந்தியாவில் நடத்தப்பட்டது.