
இந்திய மகளிர் அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, அதன்பின் நடைபெற்ற ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியதுடன் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியை ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியது.
இதனையடுத்து இந்திய மகளிர் அணி அடுத்ததாக அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி வரும் ஜனவரி 10ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள இத்தொடரின் அனைத்து போட்டிகளும் ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அயர்லாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய மகளிர் அணியில் வழக்கமான கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு பணிச்சுமை காரணமாக ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இத்தொடரில் இந்திய மகளிர் அணியின் கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக ஸ்மிருதி மந்தனா இந்திய அணியின் துணைக்கேப்டனாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் இத்தொடரில் அணியின் துணைக்கேப்டனாக தீப்தி சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.