
இந்தியா - இங்கிலாந்து முதல் ஒருநாள் போட்டி புள்ளிவிவரங்கள்: இங்கிலாந்து அணி தற்சமயம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையடாவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி நாளை நாக்பூரில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்போட்டியின் மூலம் சில சாதனைகள் படைக்கும் வாய்ப்பும் வீரர்களுக்கு கிடைத்துள்ளது. இப்போட்டியில் படைக்க வாய்ப்புள்ள சாதனைகள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
விராட் கோலியின் 14000 ரன்கள்
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி 94 ரன்கள் எடுத்தால், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 14,000 ரன்களை வேகமாக கடந்த வீரர் என்ற பெருமையைப் பெறுவார். இதுவரை சச்சின் டெண்டுல்கர் மற்றும் குமார் சங்கக்கார மட்டுமே இந்த எண்ணிக்கையை எட்டியுள்ளனர். கோலி இதுவரை விளையாடிய 283 ஒருநாள் இன்னிங்ஸ்களில் 58.18 சராசரியாகவும், 93.54 ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 13906 ரன்கள் எடுத்துள்ளார்.