விராட் கோலிக்காக இம்முறை இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் - விரேந்திர சேவாக்!
2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையை நாங்கள் சச்சின் டெண்டுல்கருக்கு பரிசளித்ததைப் போல இந்த உலகக்கோப்பையை வென்று விராட் கோலிக்கு இந்திய வீரர்கள் பரிசளிக்க வேண்டும் என முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இந்தியாவில் நடைபெற உள்ளது. மொத்தம் பத்து நகரங்களில் நடைபெற உள்ள இந்த மிகப்பெரிய தொடரில் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. ஏற்கனவே இந்த தொடருக்கான 8 அணிகள் நேரடியாக உலகக் கோப்பை தொடருக்காக தகுதி பெற்ற நிலையில், எஞ்சியுள்ள இரண்டு இடங்களுக்கான தகுதிசுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வருகிறது.
எதிர்வரும் இந்த உலகக்கோப்பை தொடரினை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போவது யார்? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவருக்கும் மத்தியிலும் காணப்படுகிறது. இந்நிலையில் 2011ஆம் ஆண்டிற்கு பிறகு 2015 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் ஒருநாள் உலகக் கோப்பையை தவறவிட்ட இந்திய அணியானது இம்முறை இந்தியாவில் இந்த தொடர் நடைபெறுவதால் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Trending
இந்நிலையில் 2011 ஆம் ஆண்டு சச்சினுக்காக இந்திய அணி எவ்வாறு கோப்பையை வென்றதோ அதேபோன்று இம்முறை விராட் கோலிக்காக கோப்பையை வெல்ல வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரான வீரேந்திர சேவாக் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “2011 ஆம் ஆண்டு நாங்கள் உலக கோப்பையில் விளையாடும் போது சச்சின் டெண்டுல்கருக்கு அது கடைசி உலக கோப்பை தொடராக அமைந்தது. எனவே அவருக்காக நாங்கள் அந்த தொடரை வென்று பரிசளிக்க விரும்பினோம். அதே எண்ணத்தோடு அந்த தொடர் முழுவதுமே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்று சச்சினுக்கு அந்த தொடரை பரிசாக வழங்கினோம்.
அதே போன்று தற்போது இந்திய அணியில் உள்ள விராட் கோலிக்காக இம்முறை இந்திய அணி வெற்றி பெற வேண்டும். ஏனெனில் இந்திய அணிக்காக பல ஆண்டுகளாக விராட் கோலி தனது சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். அதோடு அணியில் உள்ள மற்ற வீரர்களையும் ஊக்குவிக்கும் அவர் இளம்வீரர்களின் வளர்ச்சியிலும் முக்கிய பங்கினை வகித்து வருகிறார். மேலும் நல்ல ஒரு பண்புடையவர் என்பதனால் நிச்சயம் இம்முறை இந்திய அணி கோப்பையை வென்று அவருக்கு பரிசளிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now