
ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023 தொடர் சீனாவில் கோலாலமாக நடைபெற்று வருகிறது. அதில் நீண்ட வருடங்கள் கழித்து முதல் முறையாக டி20 வடிவமாக சேர்க்கப்பட்டுள்ள கிரிக்கெட்டில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் களமிறங்கியுள்ளனர். அத்தொடரில் தற்போது முதலாவதாக மகளிர் போட்டிகள் நடைபெறும் நிலையில் இன்று ஹங்கொழு நகரில் முதல் காலிறுதி போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் ஐசிசி தரவரிசையில் டாப் இடத்தில் இருப்பதால் நேரடியாக விளையாட தகுதி பெற்ற இந்திய அணியை முதல் சுற்றில் வெற்றியை பதிவு செய்து வந்த மலேசியா அணி எதிர்கொண்டது. அந்த போட்டியில் டாஸ் வென்ற மலேசியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. மேலும் இந்த போட்டியில் கடந்த சில மாதங்களுக்கு முன் வங்கதேசத்துக்கு எதிராக அத்து மீறி நடந்துக்கொண்ட கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஐசிசி விதித்த தடையால் விளையாடவில்லை.
அதனால் தற்காலிகமாக நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இந்திய கிரிக்கெட் அணியை வழி நடத்துகிறார். மேலும் மழையால் தாமதமாக தொடங்கிய இப்போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு 57 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் மந்தனா 5 பவுண்டரியுடன் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.