
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2ஆவது டெஸ்ட் போட்டி கேப் டவுன் நகரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்காவை இந்திய அணி 55 ரன்களில் சுருட்டி சாதனையை படைத்து. தென் ஆப்பிரிக்காவின் டெஸ்ட் வரலாற்றில் அந்த அணி ஒரு இன்னிங்ஸில் எடுத்த மிக குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதேபோன்று எதிரணியை மிக குறைந்த ரன்னில் ஆல் அவுட் செய்த சாதனையை இந்திய அணி இந்த மேட்ச்சில் ஏற்படுத்தியது.
இவ்வாறு முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க பேட்டிங் முடிந்த பின்னர் ஆட்டம் இந்திய அணியின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதையடுத்து, இந்திய அணி பேட்டிங்கை தொடர்ந்தபோது யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார். கேப்டன் ரோஹித் சர்மா 39 ரன்களும், சுப்மன் கில் 36 ரன்களும் எடுத்தனர். ஒருநாள் போட்டி போன்று விளையாடிய விராட் கோலி 59 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். கேஎல் ராகுல் 8 ரன்கள் எடுத்திருந்தபோது தேவையில்லாத ஷாட் பாலை பவுண்டரிக்கு அடிக்க முயன்று கேட்ச்சாகி வெளியேறினார்.
இதனால் 33 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 153 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. 34 ஆவது ஓவரை லுங்கி நிகிடி வீசினார். இதன் முதல் பந்தில் கே.எல். ராகுலும், 3 ஆவது பந்தில் ரவிந்திர ஜடேஜா ரன் ஏதும் எடுக்காமலும், 5 ஆவது பந்தில் பும்ரா ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். கடைசி பந்தை சிராஜ் சமாளித்தார்.