
ENG vs IND Test Series: இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் இன்னும் சில தினங்களில் நடைபெற இருக்கும் நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் நாடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்திய அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர். ரோஹித் சா்மா, விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் இல்லாத நிலையில், இளம் வீரா் ஷுப்மன் கில் தலைமையில் இந்திய அணி தற்போது இங்கிலாந்து சென்றுள்ளது.
அத்துடன் அறிமுக வீரர்கள் சாய் சுதர்ஷன், அர்ஷ்தீப் சிங், அபிமன்யூ ஈஸ்வரன் மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ள கருண் நாயர் மற்றும் ஷர்தூல் தாக்கூர் உள்ளிட்டோருடன் குல்தீப் யதவ், முகமது சிராஜ் உள்ளிட்டோருக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த தொடரில் இந்திய அணியின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்த டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி வீரர்கள் பயிற்சியை தொடங்கியுள்ளனர்.