Advertisement

உலகக்கோப்பை 2023: இறுதிப்போட்டியை காணவரும் பிரதமர் மோடி!

அஹ்மதாபாத்தில் நடக்க இருக்கும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan November 16, 2023 • 21:21 PM
உலகக்கோப்பை 2023: இறுதிப்போட்டியை காணவரும் பிரதமர் மோடி!
உலகக்கோப்பை 2023: இறுதிப்போட்டியை காணவரும் பிரதமர் மோடி! (Image Source: Google)
Advertisement

இந்தியாவில் நடந்து வரும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடர் வரும் 19ஆம் தேதியுடன் முடிவடைகிறது. மொத்தம் 10 அணிகள் இடம் பெற்று விளையாடிய இத்தொடரில்  இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய 4 அணிகள் மட்டுமே அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறின.

இதில், நேற்று நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இதில், இந்தியா 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 2ஆவது அணிக்கான போட்டி தற்போது கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா பேட்டிங் தேர்வு செய்தார்.

Trending


அதன்படி, முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணியில் டேவிட் மில்லர் மட்டும் 101 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க தென் ஆப்பிரிக்கா 212 ரன்கள் மட்டுமே எடுத்தது. எளிய இலக்கை துரத்தி ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது. இதில், ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால், 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இறுதிப் போட்டியில் மோதும் வாய்ப்பு கிட்டும். இல்லையென்றால், முதல் முறையாக தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவிற்கு அந்த வாய்ப்பு கிடைக்கும்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியானது வரும் 19 ஆம் தேதி அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்க இருக்கிறது. இந்த நிலையில், இறுதிப் போட்டியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ள நிலையில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் 4ஆவது டெஸ்ட் போட்டியின் போது பிரதமர் மோடி அஹ்மதாபாத்திற்கு வருகை தந்திருந்தார். அவர், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா வீரர்களை சந்தித்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த நிலையில், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இப்போட்டிக்கு முன்னதாக இந்திய விமானப்படையின் சாகச நிகழ்வும், உலகக்கோப்பை இறுதிப்போட்டி நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement