
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் இன்று அஸாம் மாநிலம் கௌகாத்தியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா 83 ரன்கள் கில் 70 ரன்கள் விராட் கோலி 113 ரன்கள் எடுக்க ஏழு விக்கெட்டுகள் இழப்பிற்கு 373 ரன்கள் சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் கசுன் ரஜிதா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அடுத்து விளையாடிய இலங்கை அணியில் தொடக்க வீரர் நிஷங்கா 72 ரன்கள், தனஞ்செய டி சில்வா 42 ரன்கள், கேப்டன் சனகா 108 ரன்கள் சேர்த்த நிலையிலும் மற்ற வீரர்கள் சோபிக்காததால், 50 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 306 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்தியா அணிதரப்பில் உம்ரான் மாலிக் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.