
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகின்றன. நடைபெற்று முடிந்த இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முடிவில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் இலங்கை அணியை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியுள்ளது.
இந்நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட் வீரர்களுக்கான புதுபிக்கப்பட்ட தவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்களுகான தரவரிசைப் பட்டியலில் இந்தியா - இலங்கை டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரண்டு இடங்கள் முன்னேறி 4ஆம் இடத்தையும், இலங்கை அணியின் பதும் நிஷங்கா 11 இடங்கள் முன்னேறி 15ஆம் இடத்தையும், குசால் மெண்டிஸ் 2 இடங்கள் முன்னேறி 19ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
மேற்கொண்டு இந்திய அணியின் துணைக்கேப்டனாக செயல்பட்ட ஷுப்மன் கில் 16 இடங்கள் முன்னேறி 21ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். இப்பட்டியலில் முதல் இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட் தொடர்கிறார். அவரைத்தொடர்ந்து இரண்டாம் இடத்தில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவும், மூன்றாம் இடத்தில் இங்கிலாந்து அணியின் பில் சால்டும் தொடர்கின்றனர்.