
இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 1 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற டி20 தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா 17 ரன்களிலும், ஷஃபாலி வர்மா 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த சுபா சதீஷ் - ஜெமிமா ரோட்ரிக்ஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். பின் 69 ரன்களில் சுபா சதீஷும், 68 ரன்களுக்கு ஜெமிமா ரோட்ரிக்ஸும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 49 ரன்களில் எதிர்பாராதவிதமாக ரன் அவுட்டாகி அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.