
ஆஸ்திரேலிய மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. அதன்படி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டி யில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணி நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இடம்பிடிக்கவில்லை.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு யஷ்திகா பாட்டியா - ஷஃபாலி வர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷஃபாலி வர்மா ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ரிச்சா கோஷ் 21 ரன்களிலும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 9 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் யஷ்திகாவுடன் இணைந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார்.