
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவிலும் இந்திய அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதனையடுத்து இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று வதோதராவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சியளிக்கும் வகையில் தொடக்க வீராங்கனை கியானா ஜோசப் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அதே ஓவரின் கடைசி பந்தில் ஹீலி மேத்யூஸும் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார்.
இதன்மூலம் இந்திய வீராங்கனை ரேணுகா தாக்கூர் தனது முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய நிலையில், அடுத்து களமிறங்கிய டியாண்டிரா டோட்டினும் 5 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு ரேணுகா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 9 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த ஷமைன் கம்பெல் - சினலே ஹென்றி இணை பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும் அடித்தனர்.