
ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடர் ஜனவரி 29ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்றைய தினம் அறிவித்துள்ளது. இதில் வழக்கமான கேப்டன் பாட் கம்மின்ஸுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இத்தொடரில் ஆஸ்திரேலிய அணியின் தற்காலிக கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் செயல்படவுள்ளார். மேற்கொண்டு இந்திய டெஸ்ட் தொடரின் போது காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட்டிற்கும் இந்த தொடரில் இடம்பிடிக்கவில்லை. அதேசமயம் இந்திய தொடரில் சோபிக்க தவறிய ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷுக்கும் இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைக்கவில்லை.
இந்நிலையில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. தனஞ்செயா டி சில்வா தலைமையிலான இந்த அணியில் லஹிரு உதாரா மற்றும் சோனல் தினுஷா உள்ளிட்ட அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் பதும் நிஷங்கா, கமிந்து மெண்டிஸ் ஆகியோர் காயம் குறித்த அச்சம் இருக்கும் நிலையிலும் இந்த டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.