
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை 2022 தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.குரூப் ஏ பிரிவில் சிறப்பாக செயல்பட்ட நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. அதேபோல், குரூப் பி பிரிவில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா, பாகிஸ்தான் அணிகளும் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளன.
வரும் 9ஆம் தேதி சிட்னியில் நடைபெறும் அரையிறுதியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளும், 10ஆம் தேதி அடிலெய்டில் நடைபெறவுள்ள அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகளும் மோதவுள்ளன. இதில் வெற்றிபெறும் அணிகள் 13ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் பங்கேற்கும்.
இந்திய அணி கடந்த 2013ஆம் ஆண்டில் சாம்பியன்ஸ் கோப்பையை வென்றப் பிறகு ஒருமுறைகூட ஐசிசி கோப்பையை வெல்லவில்லை. தற்போது டி20 உலகக் கோப்பையில் அரையிறுதிவரை முன்னேறியுள்ளனர். மேலும், அணியில் இருக்க கூடிய பேட்டர்கள், பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து அபாரமாக செயல்பட்டு வருவதால், இம்முறை இந்திய அணி கோப்பை வெல்ல வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கருதப்படுகிறது.