
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கிரெய்க் பிராத்வைட் ராஜினாமா செய்துள்ளார். அதே நேரத்தில், ரோவ்மன் பவலுக்குப் பதிலாக ஷாய் ஹோப் வெஸ்ட் இண்டீஸ் டி20 அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதில் ஷாய் ஹோப் ஏற்கெனவே ஒருநாள் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
கடந்த 2023ஆம் ஆண்டு முதல் வெஸ்ட் இண்டீஸ் டி20 கேப்டனாக செயல்பட்டு வந்த ரோவ்மன் பாவெலும் தனது பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ரோவ்மன் பாவெல் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி இதுவரை 37 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், அதில் 19 வெற்றிகள் 17 தோல்விகளைச் சந்தித்துள்ளது. மேற்கொண்டு டி20 உலகக்கோப்பை தொடரிலும் அந்த அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி இருந்தது.
அதுமட்டுமில்லாமல் அவரது தலைமையின் கீழ், வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 கிரிக்கெட்டில் மீண்டும் எழுச்சி பெற்று, இந்தியா, இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான சொந்த மண்ணில் நடைபெற்ற தொடர்களில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தி இருந்தது. மேற்கொண்டு அவர் கேப்டன் பொறுப்பை ஏற்ற பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணியானது ஐசிசி டி20 தரவரிசையிலும் முன்னேற்றம் கண்டதில் ரோவ்மன் பாவெல் முக்கிய பங்கு வகித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.