ஐபிஎல் 2021: படிக்கல் அபார சதம்; தொடரும் ஆர்சிபின் வெற்றி பயணம்!
ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் பெங்களூரு அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவுசெய்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர், மனன் வோரா ஆகியோர் களமிறங்கினர். அனுபவ வீரர் பட்லர் 8(8) ரன்களுக்கு சிராஜ் பந்துவீச்சில் தனது விக்கெட்டை இழந்தார்.
அதனைத்தொடர்ந்து மனன் வோரா 7(9) ரன்களிலும், டேவிட் மில்லர் 0(2) ரன்னிலும், கேப்டன் சஞ்சு சாம்சன் 21(18) ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். அப்போது ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 43 ரன்கள் எடுத்திருந்தது.
Trending
அதன்பின் ஜோடி சேர்ந்த சிவம் டூபே - ரியான் பாரக் ஆகியோர் சிறிது நேரம் அதிரடி காட்டினர். இருப்பினும் ரியான் பராக் 25(16) அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இந்த இணை 66 ரன்களை சேர்த்து அணிக்கு ஆறுதல் அளித்தது.
பராக் வெளியேறியதைத் தொடர்ந்து டூபேவும் 46(32) ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து தனது அரைசதத்தைத் தவறவிட்டார். மறுமுனையில் வேகமாக ரன்களை சேர்த்து வந்த திவாத்தியா 23 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து சிராஜ் பந்துவீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
கடைசி ஓவரில் ஹர்ஷல் பட்டேல் பந்துவீச்சில் மோரிஸ் 10(7) ரன்களிலும், சக்காரியா ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களை குவித்தது.ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ தரப்பில் சிராஜ், ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் தலா 3 விக்கெட்டை வீழ்த்தினர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயித்த 178 ரன்களை இலக்காக கொண்டு பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, தேவ்தத் படிக்கல் தொடக்க வீரர்களாகக் களம் கண்டனர். கடைசி இரண்டு போட்டிகளில் ஜொலிக்காத படிக்கல், இன்றைய போட்டியில் தொடக்கம் முதலே வெளுத்து வாங்கினார்.
விராட் கோலியும் அவருக்குத் துணையாக நின்று அதிரடி காட்டினார். மோரிஸ் வீசிய நான்காவது ஓவரில் 15 ரன்கள், முஷ்தபிஷூர் ரஹ்மானின் ஐந்தாவது ஓவரில் 10 ரன்கள், சக்காரியாவின் ஆறாம் ஓவரில் 10 ரன்கள் என இந்த ஜோடி பவர்பிளே முடிவில் 59 ரன்கள் எடுத்து மிரட்டியது.
அதிரடியாக விளையாடிய படிக்கல் 27 பந்துகளில் தனது அரைசதத்தைக் கடந்தார். ரியான் பராக், திவாத்தியா வீசிய முறையே எட்டவாது, ஒன்பதாவது ஓவரில் 14, 15 ரன்கள் விளாசி ராஜஸ்தான் பவுலர்களை கதறவிட்டனர் ஆர்சிபி தொடக்க இணை. இதில் கோலி 33 பந்துகளில் அரைசதத்தைக் கடந்தார்.
ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், அனைத்து பந்துவீச்சாளர்களையும் பயன்படுத்தியும் ஒரு விக்கெட்டை கூட அவர்களால் கைப்பற்ற முடியவில்லை. மேலும் தேவ்தத் படிக்கல் 51 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 16.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டி, 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வென்றது.
படிக்கல் 6 சிக்சர், 11 பவுண்டரிகளோடு 101 ரன்களுடனும், விராட் கோலி 3 சிக்சர், 6 பவுண்டரிகள் அடித்து 72 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதுவே ஆர்சிபி அணியின் அதிகபட்ச முதல் விக்கெட் பாட்னர்ஷிப் ஆகும். விராட் கோலி 54 ரன்கள் எடுத்தபோது ஐபிஎல் வரலாற்றில் 6000 ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
சதம் அடித்த தேவ்நாத் படிக்கல் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு புள்ளிப் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஞாயிறன்று (ஏப்.25) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியோடு மோதுகிறது.
Win Big, Make Your Cricket Tales Now