
இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 14வது சீசனில் 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில் வீரர்களுக்கு இடையே பரவிய கரோனா பரவல் காரணமாக இத்தொடர் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. மேலும் எஞ்சியுள்ள தொடரானது செப்டம்பர் 19ஆம் தேதி முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடர் முடிந்த பிறகு அடுத்த ஆண்டு இந்தியாவில் மீண்டும் ஐபிஎல் 15 வது சீசன் 10 அணிகளுடன் நடைபெறும் என ஏற்கனவே பிசிசிஐ அறிவித்துள்ளது. இதன் காரணமாக அடுத்த ஆண்டு அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு வீரர்கள் ஏலம் மெகா ஏலமாக நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த ஏலத்திற்கு முன்னர் ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் இருந்து நான்கு வீரர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும். அதன் படி 3 இந்திய வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரரோ அல்லது இரண்டு இந்திய வீரர் மற்றும் இரண்டு வெளிநாட்டு வீரர்கள் என எப்படி வேண்டுமானாலும் 4 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம்.