
ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அனைத்து அணிகளும் வெற்றிக்காக தீவிரமாக போராடி வருகின்றனர். இதில் இன்று நடைபெறும் 28ஆவது லீக் ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் நிகழ்வு மழை காரணமாக சுமார் 45 நிமிடங்கள் தாமதமானது. இதையடுத்து இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. அதேசமயம் இன்றைய போட்டிக்கான கேகேஆர் அணி 4 மாற்றங்களுடன் களமிறங்கியது.
அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் மற்றும் லிட்டன் தாஸ் களமிறங்கினர். இதில் லிட்டன் தாஸ் வெறும் 4 ரன்களில் ஆட்டமிழக்க, கடந்த போட்டியில் சதமடித்து அசத்திய வெங்கடேஷ் ஐயர் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். ஒருமுனையில் ஜேசன் ராய் நங்கூரம் போல் விக்கெட்டை இழக்காமல் இருந்தார்.