16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகின்றன. இந்நிலையில், இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கேமரூன் கிரீன் 2வது ஓவரிலேயே 6 ரன்களுடன் போல்டானார். அவருடன் பாட்னராக களமிறங்கிய இஷான் கிஷன் 7 ரன்களில் அவுட்டாக, அடுத்து களத்திற்கு வந்த கேப்டன் ரோஹித் சர்மா வழக்கம் போல ரன் எடுக்காமல் டக்அவுட்டானது அவரது ரசிகர்களுக்கு எந்தவித அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை.
இதையடுத்து ஜோடி சேர்ந்த நேஹால் வதேரா - சூர்யகுமார் யாதவின் கூட்டணி 10 ஓவர் வரை விக்கெட் இழப்பில்லாமல் பார்த்துக்கொண்டது. 11ஆவது ஓவரில் ஜடேஜா வீசிய பந்துகள் சூர்யகுமார் யாதவுக்கு பின்னாலிருந்து ஸ்டெம்புகளை பதம் பார்க்க 26 ரன்களுடன் அவரும் கிளம்பினார்.