
ஐபிஎல் தொடரில் இதுவரை கோப்பையை வெல்லாத அணிகளில் முக்கியமாக பார்க்கப்படுவது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்து இதுவரை ஒருமுறை கூட பெங்களூரு அணி கோப்பையை வென்றதில்லை. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று முறையும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள ஒரே அணி பெங்களூரு மட்டும் தான்.
அதுமட்டுமல்லாமல் ஏலத்தில் கணிசமான வீரர்களை தன்னிடத்தில் வைத்துக் கொண்டதும் அந்த அணிக்கு சாதகமாக உள்ளது. 16ஆவது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணி தனது முதல் போட்டியில் மும்பை அணியை எதிர்கொள்கிறது. நாளை நடக்கவுள்ள இந்தப் போட்டிக்காக பெங்களூரு வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே விளம்பர நிகழ்ச்சிகளிலும் பெங்களூரு அணி வீரர்கள் பங்கேற்று வருகின்றனர். அதேபோல் பெங்களூரு மைதானத்தில் நடக்கவுள்ள போட்டிக்காக ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட்டுகள் வாங்கினர். அந்த வரிசையில் நின்றிருந்த ரசிகர்கள் பலரும், "ஈசாலா கப் நம்தே" ஆர்சிபி-யின் வசனத்தை நம்பிக்கையுடன் கூறினர். அந்த அளவிற்கு பெங்களூரு ரசிகர்கள் பெங்களூரு அணி மீது நம்பிக்கையுடன் உள்ளனர்.