
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்றுவரும் 51ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக விருத்திமான் சஹா - ஷுப்மன் கில் இணை களமிறங்கினர். இதில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய விருத்திமான் சஹா 20 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். அவரைத் தொடர்ந்து ஷுப்மன் கில்லும் அரைசதம் கடக்க அணியின் ஸ்கோரும் 140 ரன்களைத் தாண்டியது.
தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய விருத்திமான் சஹா 10 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 81 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் தனது பங்கிற்கு 2 சிக்சர், ஒரு பவுண்டரி என 25 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.