ஐபிஎல் 2023: மோஹித் அபாரம்; மும்பையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது குஜராத்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஐபிஎல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் நடைபெற்ற முதலாவது குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்று முதல் அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணி எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி இரண்டாவது குவாலிஃபையர் லீக் ஆட்டத்திற்கு முன்னேறியது.
இதையடுத்து இன்று நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடியது. அகமதாபாத்தில் உள்ள நேரந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி மழை காரணமாக தாமதமானது. அதன்பின் அரைமணி நேரம் தாமதமாக தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
Trending
இதையடுத்து குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக ஷுப்மன் கில் - விருத்திமான் சஹா அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். இருவரும் இணைந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் விருத்திமான் சஹா 18 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இதனையடுத்து வந்த சாய் சுதர்ஷன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஷுப்மன் கில்லிற்கு ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்தார்.
அதேசமயம் மறுபக்கம் பவுண்டரியும் சிக்சர்களுமாக வெளுத்து வாங்கிய ஷுப்மன் கில் 49 பந்துகளில் தனது மூன்றாவது சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அவரின் 3ஆவது சதம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அபாரமாக விளையாடிய ஷுப்மன் கில் 60 பந்துகளில் 7 பவுண்டரி, 10 சிக்சர்கள் என 129 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சாய் சுதர்ஷன் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 43 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி ஓவரில் ரிட்டையர்ட் அவுட் முறையில் பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் வந்த ரஷித் கானும் அதிரடி காட்டினார். அவருக்கு துணையாக கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் கடைசி பந்தில் சிக்சர் அடித்ததுடன் 28 ரன்களைச் சேர்த்து இன்னிங்ஸை முடித்தார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 233 ரன்களைச் சேர்த்தது. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணி சார்பாக நேஹல் வதேரா - ரோஹித் சர்மா கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. ஃபீல்டிங்கின் போது ஏற்பட்ட காயம் காரணமாக இஷான் கிஷன் களத்தில் இருந்து வெளியேறினார். இதனால் இம்பேக்ட் வீரராக நேஹல் வதேரா தொடக்கம் கொடுத்தார். ஆனால் முகமது ஷமி வீசிய முதல் ஓவரிலேயே வதேரா 4 ரன்களிள் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஷமியின் 2ஆவது ஓவரில் ரோஹித் சர்மா 8 ரன்களில் ஆட்டமிழக்க, மும்பை அணியின் நிலை பரிதாபமானது.
இந்த நிலையில் திலக் வர்மா களமிறங்கினார். ஷமியை எதிர்கொண்ட 2ஆவது பந்திலேயே சிக்சர் அடித்த திலக் வர்மா அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். இதற்கு முகமது ஷமி பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் மீண்டும் 5ஆவது ஓவரை வீச ஷமி அழைக்கப்பட்டார். அந்த ஓவரை எதிர்கொண்ட திலக் வர்மா தொடர்ச்சியாக 4 பவுண்டரிகளை விளாசி மிரட்டிவிட்டார். 5ஆவது பந்தில் 2 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், கடைசி பந்தில் சிக்சரை விளாசி ஆச்சரியம் கொடுத்தார்.
அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட திலக் வர்மா 14 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 43 ரன்களைச் சேர்த்த நிலையில் ரஷித் கான் பந்துவீச்சில் க்ளீன் போல்டானார். இதையடுத்து ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் - கேமரூன் க்ரீன் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்த மும்பை அணியின் வெற்றி வாய்ப்பும் பிரகாசமானது.
ஆனால் அச்சயமத்தில் 30 ரன்களை எடுத்திருந்த க்ரீன் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்து அணியின் நம்பிக்கையாக பார்க்கட்ட சூர்யகுமார் யாதவ் 7 பவுண்டரி, 2 சிக்சர்களை விளாசி 61 ரன்களை எடுத்த நிலையில் மோஹித் சர்மா பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி அதிர்ச்சிக்கொடுத்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய டிம் டேவிட்டை ரஷித் கான் வீழ்த்த, விஷ்னு வினோத், கிறிஸ் ஜோர்டன், பியூஷ் சாவ்லா விக்கெட்டுகளை மோஹித் சர்மா அள்ளினார்.
அதன்பின் குமார் கார்த்திகேயாவும் 6 ரன்கள் எடுத்த நிலையில் மோஹித் சர்மா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இதால மும்பை இந்தியன்ஸ் அணி 18.2 ஓவர்களில் 171 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் அபாரமாக பந்துவீசிய மோஹித் சர்மா 10 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியதுடன், இரண்டாவது முறையாக ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இதையடுத்து வரும் மே 28ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடவுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now