
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 19ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டனில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறக்கிய ஹைதராபாத் அணிக்கு ஹாரி ப்ரூக் - மயங்க் அகர்வால் இணை களமிறங்கியது. இதில் நடப்பு ஐபிஎல் சீசனில் சோபிக்காமல் ரசிகர்களை ஏமாற்றி வந்த ஹாரி ப்ரூக் முதல் பந்திலேயே பவுண்டரி விளாசி தனது இன்னிங்ஸை தொடங்கினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ப்ரூக் அடுத்தடுத்த ஓவர்களில் பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசிதள்ளினார்.
அதேசமயம் மறுமுனையில் மயங்க் அகர்வால் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆண்ட்ரே ரஸலின் முதல் பந்திலேயே விக்கெட்டை இழக்க, அதே ஓவரின் கடைசி பந்தில் ராகுல் திரிபாதியும் 9 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதையடுத்து ப்ரூக்குடன் இணைந்த கேப்டன் ஐடன் மார்க்ரமும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.