
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி இன்று நடக்க இருக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இன்று காலை முதல் லக்னோவில் மழை பெய்து வந்த நிலையில், தற்போது வானம் கிளியரான நிலையில் உள்ளது. ஆதலால், இன்றைய போட்டி கண்டிப்பாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வில்லி காயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். இதற்கு முன்னதாக வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லீ ஐபிஎல் தொடரிலிந்து விலகிய நிலையில் அவருக்குப் பதிலாக டேவிட் வில்லி களமிறக்கப்பட்டார். தற்போது அவரும் காயம் காரணமாக விலகியுள்ளார். ஆதலால், அவருக்குப் பதிலாக இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் கேதர் ஜாதவ் ஆர்சிபி அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இடம் பிடித்த கேதர் ஜாதவ், 2016 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்றார். இதையடுத்து, 2018 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்த ஜாதவ் காயம் காரணமாக அந்த தொடரிலிருந்து விலகினார். 2021 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பிடித்த ஜாதவ், 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் விலை போகவில்லை. இந்த நிலையில், தற்போது மீண்டும் ஆர்சிபி அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.