
ஐபிஎல் 16ஆவது சீசன் இன்று தொடங்கி நடந்துவருகிறது. இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச தீர்மானித்து சிஎஸ்கேவை பேட்டிங் செய்ய அழைத்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தொடக்கம் முதலே அடித்து விளையாடி 23 பந்தில் அரைசதம் அடித்தார். ஒருமுனையில் ருதுராஜ் கெய்க்வாட் நிலைத்து நின்று விளையாட, மறுமுனையில் டெவான் கான்வே (1), மொயின் அலி(23), பென் ஸ்டோக்ஸ்(7), அம்பாதி ராயுடு(12) ஆகியோர் சொற்ப ரன்களுக்கு சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.
இதில் அதிரடியாக விளையாடி சதத்தை நெருங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 50 பந்தில் 9 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் என 92 ரன்களை குவித்து 8 ரன்னில் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். அதன்பின் ஜடேஜா ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஷிவம் துபே 19 ரன்கள் அடித்தார். தோனி கடைசி ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி என 14 ரன்கள் விளாசி இன்னிங்ஸை முடித்து கொடுத்தார்.