
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. சென்னை சேப்பாக்கத்தின் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ராஜஸ்தான் அணி தரப்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரண்டாவது ஓவரின் 4ஆவது பந்திலேயே அவுட்டாகி 10 ரன்களுடன் வெளியேறினார். ஜோஸ் பட்லருடன், தேவ்தத் படிக்கல் கைகோத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 8 ஓவர் வரை தாக்குப்பிடித்த அவரும், ஜடேஜா வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து விக்கெட்டாகி 38 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் ரன்கள் எதுவும் எடுக்காமல் போல்டானார். அஸ்வினும் பெரிய அளவில் நம்பிக்கை கொடுக்காமல் 30 ரன்களுடன் கிளம்பினார்.
தனியொரு ஆளாக நிலைத்து ஆடிய பட்லர் 52 ரன்களுடன் கிளம்ப 17ஆவது ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்களை சேர்த்தது ராஜஸ்தான். துருவ் ஜூரல் 4 ரன்களுடன் சுருங்கிவிட, கடைசி ஓவரில் ஜேசன் ஹோல்டர் , ஆடம் ஜம்பா அடுத்தடுத்து ஆட்டமிழக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் 175 ரன்களை சேர்த்தது. ஷிம்ரோன் ஹெட்மேயர் 30 ரன்களுடன் களத்தில் இருந்தார். சென்னை அணி தரப்பில் துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், மோயின் அலி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.