ஐபிஎல் 2023: ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி ஆர்சிபி அசத்தல் வெற்றி!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
வார இறுதியான இன்று ஐபிஎல் தொடரில் இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. அதன்படி 32ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களாக விராட் கோலி , டு பிளசிஸ் களமிறங்கினர். தொடக்கத்தில் போல்ட் பந்துவீச்சில் விராட் கோலி ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.அடுத்து வந்த ஷாபாஸ் அகமது 2 ரன்களில் வெளியேறினார். பின்னர் மேக்ஸ்வெல் , டு பிளசிஸ் இணைந்தது அதிரடி காட்டினர் . ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். தொடர்ந்து சிக்ஸர்கள் பறக்க விட்ட இருவரும் அரைசதம் அடித்தனர்.
Trending
அரைசதம் அடித்த பிறகு தொடர்ந்து ஆடிய டு பிளசிஸ் ரன் அவுட்டில் 39 பந்துகளில் 62 ரன்களும் , மேக்ஸ்வெல் 44 பந்துகளில் 77 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது பெங்களூரு.ராஜஸ்தான் சார்பில் சந்தீப் ஷர்மா,போல்ட் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு ஜோஸ் பட்லர் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை களமிறங்கியது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜோஸ் பட்லர் ரன்கள் ஏதுமின்றி முகமது சிராஜின் முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த யஷஸ்வி ஜெய்ஷ்வால் - தேவ்தத் படிக்கல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இதில் தொடர்ந்து அபாரமாக விளையாடிய தேவ்தத் படிக்கல் அரைசதம் கடந்தார்.
அதன்பின், 52 ரன்கள் சேர்த்திருந்த தேவ்தத் படிக்கல் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து அரைசதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தேவ்தத் படிக்கல் 47 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதையடுத்து வந்த சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடினாலு, 22 ரன்களை மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து அதிரடி வீரர் ஷிம்ரான் ஹெட்மையர் வெறும் 3 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் தேவையில்லாமல் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய துருவ் ஜூரென் - ரவிச்சந்திரன் அஸ்வின் இணை அடுத்தடுத்த பவுண்டரிகளை விளாசி அணியை வெற்றிக்கு அருகே அழைத்துச் சென்றார்.
பின் 12 ரன்கள் எடுத்திருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்ப, கடைசி இரண்டு பந்துகளில் ராஜஸ்தான் அணி வெற்றிக்கு 10 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
ஆனால் அதனை எட்டமுடியாமல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆர்சிபி அணி தரப்பில் ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
Win Big, Make Your Cricket Tales Now