
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 5ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா - இஷான் கிஷான் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் இஷான் கிஷான் 10 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடந்து களமிறங்கிய கேமரூன் க்ரீன் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரோஹித் சர்மா வெறும் ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் - திலக் வர்மா இணை அணியை சரிவிலிருந்து மீட்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சூர்யகுமார் யாதவ் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இருப்பினும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய திலக் வர்மா அணியின் ஸ்கோரை உயர்த்த, அவருடன் இணைந்த நெஹல் வதேராவும் அதிரடி காட்டத் தொடங்கினார்.