
கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஐபிஎல் தொடர் கிரிக்கெட் தொடரின் 16ஆவது சீசன் மார்ச்31ஆம் தேதி தொடங்கி மே 28ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெற இருக்கின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாட இருக்கிறது. ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் இதற்கான பயிற்சியிலும் அணிகள் இறங்கியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக வலம் வருபவர் ரிஷப் பந்த். இடது கை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த், பல்வேறு போட்டிகளில் இந்திய அணிக்காக சிறப்பாக ஆடி வெற்றியை தேடிக் கொடுத்துள்ளார். டெஸ்ட், டி 20 மற்றும் ஒரு நாள் போட்டி என அனைத்திலும் சிறந்து விளங்கி வரும் ரிஷப் பந்த், ஐபிஎல் தொடரிலும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார்.
இதனிடையே கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி உத்தரகண்ட் மாநிலம் ரூர்க்கி அருகே பந்த், கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்தின் காரணமாக அவருக்கு முழங்காலில் தசைநார் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இதனால் பண்ட் மீண்டும் இந்திய அணியில் இணைய மாதக்கணக்கில் காலம் ஆகலாம் என கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.