
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்ரு வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடியாது. கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கேகேஆர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய கேகேஆர் அணியானது பில் சால்ட், ஆண்ட்ரே ரஸல், ரமந்தீப் சிங் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்களை குவித்தது. இப்போட்டியில் சிக்சர் மழை பொழிந்த ஆண்ட்ரே ரஸல் 3 பவுண்டரி, 7 சிக்சர்கள் என 64 ரன்களையும், பில் சால்ட் 3 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 54 ரன்களையும், ரமந்தீப் சிங் ஒரு பவுண்டரி, 4 சிக்சர்கள் என 35 ரன்களையும் சேர்த்து அசத்தினர்.
இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி சன்ரைசர்ஸ் ஹைதராபாத அணி விளையாடி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் 7 சிக்சர்களை விளாசியதன் மூலம் கேகேஆர் அணியின் ஆண்ட்ரே ரஸல் ஐபிஎல் தொடரில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். அதன்படி, ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 200 சிக்சர்களை விளாசிய ஒன்பதாவது வீரர் எனும் பெருமையை ஆண்ட்ரே ரஸல் பெற்றுள்ளார்.