
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான காட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியானது இந்த சீசனில் முதல் அணியாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்ததுடன், விளையாடிய 14 போட்டிகளில் 4இல் மட்டுமே வெற்றியைப் பதிவுசெய்து 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் தொடரை நிறைவு செய்துள்ளது.
அந்த அணியின் இந்த மோசமான செயல்பாட்டிற்கு கேப்டன் மாற்றம் ஒரு காரணமாக பேசப்பட்டாலும், பெரும்பாலான நட்சத்திர வீரர்கள் தொடர்ச்சியாக சோபிக்க தவறியதே அந்த அணியின் இந்த நிலைமைக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதிலும் அந்த அணியின் பந்துவீச்சில் ஜஸ்ப்ரித் பும்ராவைத் தாண்டி மற்ற வீரர்களில் சொல்லிக்கொள்ளும் அளவில் எந்த வீரர்களும் சிறப்பாக செயல்படவில்லை.
மறுபக்கம் பேட்டிங்கை எடுத்துக்கொண்டால் ரோஹித் சர்மா, இஷான் கிஷான், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் போன்ற அதிரடி வீரர்கள் இருந்த போதும், திலக் வர்மாவை தவிர்த்து மற்ற வீரர்கள் தொடர்ச்சியான ரன்களைச் சேர்க்க தவறியது அந்த அணியின் தொடர் தோல்விக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இதில் அந்த அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான ரோஹித் சர்மாவின் செயல்பாடுகள் ஒருசில போட்டிகளைத் தவிர்த்து மற்ற போட்டிகளில் சோல்லிக்கொள்ளும் அளவில் இல்லை.