
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் 25ஆவது லீக் ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்தின. மும்பையிலுள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீசுவதாக அறித்தார். இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸும், நட்சத்திர வீரர் விராட் கோலியும் தொடக்கம் கொடுத்தனர்.
இதில் கடந்த போட்டியில் சதமடித்து அசத்திய விராட் கோலி இப்போட்டியில் 3 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அறிமுக வீரர் வில் ஜேக்ஸ் அதிரடியாக தொடங்கினாலும் 2 பவுண்டரிகளுடன் 8 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் டூ பிளெசிஸுடன் இணைந்த ராஜத் பட்டிதார் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன், ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினார்.
குறிப்பாக நடப்பு சீசனில் பெரிதளவில் சோபிக்க தவறிய ராஜத் பட்டிதார் இப்போட்டியில் அதிரடியாக விளையாடியதுடன் அடுத்தடுத்து சிக்சர்களை விளாசி 25 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த நிலையில், அடுத்த பந்திலேயே தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய் கிளென் மேக்ஸ்வெல் இப்போட்டியிலும் சொற்ப ரன்னிறி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதேசமயம் மறுபக்கம் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் இந்த ஐபிஎல் தொடரில் தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்தார்.