
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறக்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சுனில் நரைனின் அதிரடியான சதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 223 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக சுனில் நரைன் 109 ரன்களைச் சேர்த்தார்.
அதன்பின் கடின இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணியிலும் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ரியான் பராக், ஷிம்ரான் ஹெட்மையர், ரோவ்மன் பாவெல் போன்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், இறுதிவரை களத்தில் இருந்த ஜோஸ் பட்லர் சதமடித்து அசத்தியதுடன் அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் விளையாடிய 7 போட்டிகளில் 6 வெற்றி, ஒரு தோல்வி என புள்ளிப்பட்டியலில் தங்கள் முதலிடத்தை தக்கவைத்துள்ளது. அதேசமயம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடிய 6 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்வி என பட்டியலின் இரண்டாம் இடத்தில் தொடர்கிறது. இப்போட்டியில் சதமடித்ததுடன் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்த ஜோஸ் பட்லர் ஆட்டநாயகன் விருதை வென்றார்.