
17ஆவது சீசன் ஐபிஎல் தொடர் இன்று தொடங்கியது. அதன்படி இன்று நடைபெற்று வரும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடிவருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணி தொடக்கத்திலேயே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி மிரளவைத்தது. அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த ஃபாஃப் டூ பிளெசிஸ் 8 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ராஜத் பட்டிதார், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
அதன்பின் அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட விராட் கோலி 21 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். இதனால் ஆர்சிபி அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிவருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் 21 ரன்களை எடுத்ததன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி புதிய சாதனை ஒன்றையும் நிகழ்த்தியுள்ளார்.